மதுபான மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்திய நிலையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டுள்ளார்..
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா மீதான மதுபான மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை (ED) இன்று மீண்டும் அவரின் வீட்டில் சோதனை நடத்தியது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில், பிலாய் நகரில் உள்ள சைதன்யாவின் வீட்டை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சோதனை செய்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிலாயில் உள்ள பாகேலின் வீட்டிற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சோதனையை தொடர்ந்து சைதன்யா பாகேல், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. மோசடியாக பணம் சம்பாதித்துள்ளார் என்ற புதிய ஆதாரங்களின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ED அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கவாசி லக்மாவைத் தவிர, ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா, இந்திய தொலைத்தொடர்பு சேவை (ஐடிஎஸ்) அதிகாரி அருண்பதி திரிபாதி மற்றும் சிலரை அமலாக்கத் துறை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..