மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு முக்கிய 1MDB வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (72), பிரபலமான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது..
நஜிப் ரசாக், அரசின் முதலீட்டு நிறுவனம் 1MDB-யிலிருந்து சட்டவிரோதமாக 2.2 பில்லியன் மலேசிய ரிங்கிட் (அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 543 மில்லியன்) தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், அவர் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக 4 குற்றச்சாட்டுகள், பண மோசடி (money laundering) தொடர்பாக 21 குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டன.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி காலின் லாரன்ஸ் செக்வெரா, நஜிப் ரசாக் முன்வைத்த “இந்த வழக்கு அரசியல் பழிவாங்கலுக்காக நடத்தப்படுகிறது” என்ற வாதத்தை முற்றாக நிராகரித்தார். “இந்த வழக்கு அரசியல் நோக்கத்தால் தொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை, குற்றவாளிக்கு எதிராக உள்ள தெளிவான, மறுக்க முடியாத ஆதாரங்கள் முற்றிலும் நிராகரிக்கின்றன. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 1MDB-யில் தனக்குக் கொடுக்கப்பட்ட பரந்த அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலம், மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் 1MDB விவகாரம் மீண்டும் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 1MDB ஊழல் வழக்கில் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். அவர் பிரதமர், நிதியமைச்சர் மற்றும் 1MDB ஆலோசனை குழு தலைவர் என்ற பதவிகளைப் பயன்படுத்தி, அரசு நிதியை தனிப்பட்ட லாபத்திற்காக திருப்பியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
பண மோசடி குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. இந்த அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் (simultaneously) அனுபவிக்கப்பட வேண்டும். இது 1MDB விவகாரத்தில் நஜீபுக்கு விதிக்கப்பட்ட இரண்டாவது தீர்ப்பு ஆகும்.. 2020 ஆம் ஆண்டு, இதே நிதியிலிருந்து சுமார் 1 கோடி அமெரிக்க டாலர் (USD 10 million) தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு 12 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நஜீப், 1MDB விவகாரத்தில் தன்னுடைய பங்கிற்காக மலேசிய மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, இந்த ஊழலில் தன்னை ஏமாற்றியது ஜோ லோ (Jho Low) என்ற நிதி தொழிலதிபர் எனக் கூறினார்.
ஜோ லோ 2016 முதல் இன்டர்போல் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து வருகிறார்.



