பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் பயணித்து, தற்போது திமுகவில் முக்கிய பதவியைப் பெற்றுள்ளார்.
மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991 ஆம் ஆண்டு பாஜகவில் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பணியாற்றிய அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி.) அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு முக்கியப் பங்காற்றினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவின்போது, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் முன்னிலையில் மீண்டும் அசல் கட்சிக்குத் திரும்பி பாஜகவில் இணைந்தார்.
ஆனால், அதுவும் நீடிக்கவில்லை. அடுத்த ஓராண்டுக்குள், 2024 செப்டம்பர் 12 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அ.தி.மு.க.வில் அவர் மீண்டும் இணைந்த முடிவும் விரைவில் மாறியது. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதலமைச்சரே உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்நிலையில், மைத்ரேயனுக்கு தி.மு.க.வின் ‘கல்வியாளர் அணி துணைத் தலைவர்’ என்ற கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக எனப் பல கட்சிகளில் பணியாற்றிய அவருக்குத் தி.மு.க.வில் இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.



