தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கே.சி.ஆர். தனது குடும்பத்தினருடன் எர்ரவெல்லி பண்ணை இல்லத்திலிருந்து ஹைதராபாத்தின் நந்திநகரில் உள்ள தனது இல்லத்திற்கு பயணம் செய்தார். வீட்டில் சிறிது நேரம் தங்கிய பிறகு அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹைதராபாத்தின் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் ஏற்பட்ட பலவீனம் காரணமாக கே.சி.ஆர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யசோதா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ” முதற்கட்ட விசாரணையில், உயர் இரத்த சர்க்கரை மற்றும் குறைந்த சோடியம் அளவுகள் அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது..” என்று தெரிவித்துள்ளது.
சந்திர சேகர ராவ் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சோடியம் அளவை அதிகரிக்கவும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரின் உடல்நலம் குறித்து விசாரித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தார். கே.சி.ஆருக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார். ராவ் விரைவில் குணமடைந்து, பொது சேவையில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேசிஆர் தனது வீட்டில் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.