பிரான்சின் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, திங்களன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், தனது பதவியை ராஜினாமை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இந்த வாக்கெடுப்பில் பேய்ரூ 364 எதிர்ப்பு வாக்குகளையும், 194 ஆதரவு வாக்குகளையும் பெற்றார்.
பேய்ரூவின் ராஜினாமை, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். ஏனெனில் கடந்த ஒரு ஆண்டுக்குள் அவர் நியமித்த மூன்றாவது பிரதமர் பதவி விலகியுள்ளார். அதற்கு முன்பு கேப்ரியல் அட்டல் மற்றும் மைக்கேல் பார்னியர் ஆகியோரும் ராஜினாமை செய்தனர்.
பிரான்சின் பொதுக் கடன் தற்போது மிக அதிக அளவில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114% அளவிற்கு (€3.35 டிரில்லியன்) கடன் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த 2026க்குள் €44 பில்லியன் செலவினங்களை குறைக்கும் திட்டத்தை பேய்ரூ அறிவித்தார். ஆனால், இந்த திட்டம் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் என்று பலர் விமர்சித்தனர். இடது மற்றும் வலதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாகியது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, தீவிர இடதுசாரி கட்சியின் தலைவர் மதில்டே பனோட், மக்ரோனே ராஜினாமை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். “அதே கொள்கைகளைத் தொடரும் மற்றொரு பிரதமர் வேண்டாம். மக்களின் விருப்பத்தை மதிக்காத ஜனாதிபதியே பிரச்சினை” என்று அவர் கூறினார். இதனால், மக்ரோனுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
அடுத்தது என்ன? செவ்வாய்க்கிழமை மக்ரோன் பேய்ரூவின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். ஆனால் பாராளுமன்றத்தில் மக்ரோனின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், புதிய அரசாங்கமும் பலவீனமாகவே இருக்கும் அபாயம் உள்ளது.
தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென், தேசிய சட்டமன்றத்தை மீண்டும் கலைக்குமாறு மக்ரோனை அழுத்தம் கொடுத்து வருகிறார். “பிரான்ஸ் போன்ற பெரிய நாடு ஒரு பலவீனமான அரசாங்கத்துடன் நீடிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார். மக்ரோனின் பதவிக்காலம் 2027-ல் முடிவடைகிறது. ஆனால் அதுவரை அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில், ராஜினாமை செய்ய வேண்டிய நிலை உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
Read more: கைமீறியப் போராட்டம்!. நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!. அமைச்சர் அறிவிப்பு!.



