மோட்டார் வாகனத் துறையின் எம்-பரிவஹான் (mParivahan app) செயலியின் பெயரில் சைபர் மோசடியால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சைபர் மோசடிமூலம் பலர் பணத்தை இழந்துள்ளனர். சைபர் மோசடி குறித்து காவல்துறை மோட்டார் வாகனத் துறை மற்றும் சைபர் பிரிவு, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளன.
இந்த மோசடியில் பணத்தை இழந்த பெரும்பாலானோர் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த சைபர் மோசடியால் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ரூ.1.5 லட்சம் வரை இழந்துள்ளனர் என்பது மேலும் தகவல்.
வாகன விதி மீறல்களைக் குறிப்பிட்டு வாட்ஸ்அப் வழியாக இந்தச் செய்தி அனுப்பப்பட்டு மோசடி அரங்கேறி வருகிறது. AI கேமரா அல்லது காவல்துறையின் வேக கேமரா மூலம் கண்டறியப்பட்ட விதிமீறல்களும், பார்க்கிங் தடை, நேரடி வாகன பரிசோதனையில் இ-சலான் போன்றவற்றை குறித்து இந்த மோசடி மெசேஜ் வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படுகிறது. வாகன உரிமையாளர் அந்த செய்தியைத் திறக்கும்போது, அபராதத்தைச் செலுத்த APK கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு அதில் கேட்கப்படுகிறது. வாகன உரிமையாளர் இதைப் பதிவிறக்கம் செய்தால், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை வைத்திருந்தால் அவர்கள் பணத்தை இழந்துவிடுகிறார்கள்.
இந்த மோசடியில் சிக்காமல் இருக்க, நாம் அறிய வேண்டியவை:
காவல்துறை அல்லது மோட்டார் வாகனத் துறை வாட்ஸ்அப் வழியாகச் சலான்களை ஒரு போதும் அனுப்பாது.
உங்கள் வாகன விதி மீறல்களைக் குறித்து சலானில் 19 இலக்க எண்கள் இருக்கும். ஆனால் மோசடி சலான்களில் 14 இலக்க எண்கள் மட்டுமே இருக்கிறது.
எம்-பரிவஹான் செயலியை (mParivahan app) பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் மூலம் மட்டுமே நிறுவ முடியும். ஒரு போதும் APK கோப்புகளின் மூலம் பதிவிறக்கம் செய்யக்கூடாது.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வரும் மின்-சலான் தகவலை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். அபராதம் செலுத்துமாறு உங்களுக்கு ஒரு செய்தி வந்தால், அது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை வழங்குமாறு கேட்கும் அத்தகைய செய்திக்கு அடிபணிய வேண்டாம்.
நிதி மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் புகார் பதிவு செய்ய வேண்டும்.
Read More: 28 பேர் காயம்.. மக்கள் கூட்டத்தில் திடீரென வாகனம் புகுந்ததால் பெரும் பரபரப்பு..