கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விட்டல், 3 திருமணங்கள் செய்து கொண்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்-ஷி என்பவருடன் நட்பாக பழகி, பிறகு காதலில் விழுந்துள்ளார். வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்துள்ள நிலையில், விவகாரத்தாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விட்டலின் குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வனஜாக்-ஷி, தனக்கு ஆறுதலாக இருந்த மாரியப்பா என்பவருடன் நெருக்கம் காட்டியுள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்த நிலையில், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, சம்பவத்தன்று வனஜாக்-ஷி தனது புதிய காதலன் மாரியப்பாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை பின்தொடர்ந்த விட்டல், ஒரு சிக்னலில் காரை வழிமறித்துள்ளார். மேலும், தான் கொண்டு வந்த பெட்ரோலை காருக்குள் ஊற்றியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பா மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் தப்பியோடிவிட்டனர்.
வனஜாக்-ஷியும் தப்பி ஓட முயன்றபோது, விடாமல் துரத்திய விட்டல் அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விட்டலை அதிரடியாக கைது செய்தனர்.