வேர்க்கடலை என்பது சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகவும் இருக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கியம் : வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது.
நீரிழிவு நோய் : இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக உள்ளது.
மூளை செயல்பாடு : வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மூளை திசுக்களை பாதுகாக்கிறது. மேலும், அறிவாற்றல் குறைபாட்டை தடுக்கிறது.
அளவுக்கு மீறினால் ஆபத்து..!!
ஒவ்வாமை : வேர்க்கடலை ஒரு பொதுவான ஒவ்வாமை உணவாகும். சிலருக்கு வீக்கம், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எடை அதிகரிப்பு : வேர்க்கடலையில் அதிக கலோரிகள் இருப்பதால், அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம்.
மருந்துகள் : ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் உட்கொள்பவர்கள், வேர்க்கடலை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், வேர்க்கடலை சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம்.
எது சிறந்தது..?
வேர்க்கடலையை வறுத்தோ, வேகவைத்து அல்லது பச்சையாகவோ சாப்பிடுவதில் ஊட்டச்சத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டுமொத்த நன்மைகளில் பெரிய வித்தியாசம் இல்லை. பச்சையான வேர்க்கடலை அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. ஆனால், ஜீரணிக்கக் கடினமாக இருக்கலாம்.
வறுத்த வேர்க்கடலை சுவையை அதிகரிக்கும். சில ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும், ஒட்டுமொத்த நன்மை குறையாது. உப்பு சேர்த்த வேர்க்கடலையில் அதிக சோடியம் இருப்பதால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. வீட்டிலேயே உப்பு சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. எனவே, வேர்க்கடலையை அளவோடு சாப்பிட்டு அதன் நன்மைகளை முழுமையாகப் பெறுவது சிறந்தது.