நார்வே செஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் டொம்மராஜு குகேஷ், ஜூன் 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலக நம்பர் 1 வீரரான மக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் மக்னஸ் கார்ல்சன் ஒரு தவறு செய்ததினால், குகேஷ் பெரிய முன்னிலை பெற்றார், இது அவருடைய மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
தனது தோல்வியால் மிகவும் விரக்தியடைந்த கார்ல்சன் வெளிப்படையாகவே கையை மேசையில் தட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதே நேரத்தில், இந்த வரலாற்று வெற்றியை நம்ப முடியாமல் குகேஷ் மிகுந்த அதிர்ச்சியுடன் நின்றார். தற்போது 8.5 புள்ளிகளுடன் குகேஷ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்னிலையில் உலக நம்பர் 1 மக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானா உள்ளனர்.
டொம்மராஜு குகேஷ், ஒரு இளவயது அதிசயம், கடந்த டிசம்பர் 2024ல் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து, 18 வயதில் உலக சதுரங்க சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதுவரை இல்லாத வகையில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
குகேஷ் 2006 மே 29 அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் ரஜினிகாந்த். இவர் ஒரு ஈஎன்டி அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார், மற்றும் தாய் டாக்டர் பத்மா ஒரு மைக்ரோபயாலஜிஸ்ட் ஆவார். குகேஷ் தனது பள்ளிப்படிப்பை சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் முடித்தார். தனது 7 வயதில் செஸ் விளையாட்டை தொடங்கிய குகேஷ், இதுவரை பல்வேறு அபூர்வமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு, வெறும் 17 வயதில், அவர் 2750 எலோ மதிப்பெண்களை கடந்த இளைய வீரராக ஆகஸ்டில் வரலாற்று சாதனை செய்தார். இதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரராக விளங்கிய விசுவநாதன் ஆனந்தை மிஞ்சி, இந்தியாவின் நம்பர் 1 வீரராகக் கருதப்பட்டார்.
சொத்து மதிப்பு: உலக சதுரங்க சாம்பியன்ஷிப் வெற்றியின் மூலம், டொம்மராஜு குகேஷ் சதுரங்க வரலாற்றில் தன்னுடைய பெயரை நிழலற்ற முறையில் பதித்துள்ளார். இந்த வரலாற்று வெற்றி அவரது புகழையும் மதிப்பையும் பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், இந்த சாதனை அவரது நிகர மதிப்பை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கச் செய்துள்ளது.
2024ஆம் ஆண்டில் குகேஷின் சொத்து மதிப்பு ரூ. 8.26 கோடி (தோராயமாக $1.5 மில்லியன்) ஆக இருந்தது. ஆனால் உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக கைப்பற்றியதுடன், தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு கடும் உயர்வை கண்டது. அதாவது சுமார் ரூ. 20 கோடி (தோராயமாக $2.4 மில்லியன்) ஆக உயர்ந்துள்ளது. சதுரங்கம் ஒரு ‘குறைந்த ஊதியம் பெறும் விளையாட்டு’ என்று பலர் கருதலாம், ஆனால் குகேஷ் போன்ற வீரர்களின் வெற்றிகள் மற்றும் வளர்ச்சி, அந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளன.
2024 ஆம் ஆண்டு உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றதற்குப் பிறகு, குகேஷ் மொத்தமாக $2.5 மில்லியன் (சுமார் ரூ. 21 கோடி) பரிசுத் தொகையை பெற்றார். இந்த பரிசுத் தொகை மட்டுமின்றி, உலக சாம்பியனாக கிடைத்த அந்தப் பெருமை, விளம்பர ஒப்பந்தங்கள், புரொமோஷன் வாய்ப்புகள் மற்றும் பிரபலத்துடன் கூடிய வருமானங்களை பெருக்கி, அவரது சொத்து மதிப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
மேலும், டி. குகேஷ் தனது உலக சாம்பியன்ஷிப் பயணத்தில் மூன்று ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்திருந்தார். ஒவ்வொரு வெற்றிக்குமான பரிசுத்தொகை $200,000 (சுமார் ரூ. 1.69 கோடி) என, வெறும் மூன்று வெற்றிகளுக்கே மொத்தமாக $600,000 (சுமார் ரூ. 5.07 கோடி) சம்பாதித்துள்ளார். அதாவது, குகேஷ் 17 நாட்களில் ரூ. 17 கோடி சம்பாதித்தார் என்பதையே இது குறிக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே எனும் அளவில் வருமான இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது செல்வத்தை மேலும் உயர்த்திய ஒன்று, உலக சாம்பியன்ஷிப் தவிர பிற பல போட்டிகளில் வென்ற பரிசுத் தொகைகள். டி. குகேஷ், வெவ்வேறு சதுரங்க போட்டிகளில் வென்ற பரிசுகளிலிருந்து மட்டும் சுமார் ரூ.13.6 கோடி (தோராயமாக $1.58 மில்லியன்) வரை சம்பாதித்துள்ளார். சதுரங்கத்தைத் தவிர, பல பிரபல நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்களும் அவரது சொத்து மதிப்பில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தகவல்களின்படி, ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தமும் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், டி. குகேஷ் இன்று வெறும் ஒரு சதுரங்க வீரரல்ல, அவர் உலகளவில் புகழ்பெற்ற, உயர்ந்த வருமானம் பெறும் விளையாட்டு வீரராகவும் மாறியுள்ளார்.
ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் அமைந்த இன்னொரு விஷயம் என்னவென்றால், டி. குகேஷ் தனது பள்ளியான வேலம்மால் வித்யாலயாவிலிருந்து பெற்ற சூப்பர் கிஃப்ட். அவர் உலக சாம்பியன்ஷிப் வெற்றியைச் சிறப்பித்ததற்காக, பள்ளி நிர்வாகம் அவருக்கு Mercedes-Benz E-Class கார் ஒன்றை பரிசாக வழங்கியது. இந்தக் காரின் விலை ரூ.87 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை இருக்கும். இந்த அளவிலான பரிசும், அவரது மொத்த செல்வத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாகும். மொத்தமாக, பரிசுத் தொகைகள், விளம்பர வருவாய், பிரீமியம் பரிசுகள், மற்றும் தனிப்பட்ட கிஃப்ட்கள், அனைத்தையும் சேர்த்து பார்த்தால், 20 வயதுக்குள் குகேஷின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Readmore: சூப்பர் வாய்ப்பு… தமிழக அரசு வழங்கும் இரண்டு நாட்கள் அழகு தொழிலில் பயிற்சி…!