ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க, யுனெஸ்கோ (UNESCO) 1999-ல் இந்த நாளை அறிவித்தது. வங்காள மொழிக்காக போராடிய தியாகிகளை நினைவு கூரும் வகையில், தாய்மொழி உரிமையை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கமாகும்.. .தமிழ்நாட்டில், தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக கவியரங்கம், கருத்தரங்குகள் மூலம் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!” என்று குறிப்பிட்டுள்ளார்..
அதே போல் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உலக தாய்மொழி தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மற்றொரு பதிவில் “ தொலைதூர எகிப்தின் மணலில் தங்கியிருக்கும் பொறிக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துக்கள் முதல் கீழடியின் செங்கல் வரிசையான தெருக்கள் வரை பழங்காலத்தின் வழியாக கிசுகிசுக்கின்றன; நமது முன்னோர்கள் வெறுமனே வாழ்ந்ததில்லை; அவர்கள் பொறித்தனர், கற்பனை செய்தனர், பயணம் செய்தனர், கட்டினார்கள்.
பெருங்கடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஒரே குரல் நிலைத்திருக்கிறது. தமிழ் – பழமையானது மட்டுமல்ல, நித்தியமானது. இப்போது இந்த உலகின் பிற பகுதிகளுடன் அவர்களின் மொழியில் பேசுவோம்.” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்..



