இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை ஜூலை 2025 இல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், ஏனெனில் இந்த மாதம் பல புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் மின்சார MPVகள், சொகுசு செடான்கள் மற்றும் பிரபலமான SUVகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் அடங்கும். நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரவிருக்கும் இந்த கார்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: கியா நிறுவனம் தனது முதல் மின்சார MPV வகையான கேரன்ஸ் கிளாவிஸ் EV காரை ஜூலை 15, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் க்ரெட்டா EV பயன்படுத்தும் பவர்டிரெயின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 42kWh, 51.4kWh பேட்டரி விருப்பங்களை கொண்டது. 300 முதல் 400 கிலோமீட்டர் வரை மதிப்பிடப்பட்ட வரம்பைக் கொண்டிருக்கும்.
உட்புறம் மற்றும் வெளியுறு வடிவமைப்பு தற்போதைய ICE (Internal Combustion Engine) கேரன்ஸ் காரைப் போலவே இருக்கும். இது இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது வெகுஜன மின்சார MPV ஆகும். இந்த புதிய கியா EV, இந்திய மின்சார வாகன சந்தையில் முக்கிய புரட்சியொன்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எம்ஜி எம்9: எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய பிரீமியம் மின்சார MPV வகையான MG M9 காரை ஜூலை மாத இறுதி வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்த MPV, பிரமாண்ட வசதிகளுடன் வர உள்ளது. இந்த காரில் 90kWh திறனுள்ள பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 548 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். அதோடு, 245bhp சக்திவாய்ந்த மின்சார மோட்டார் இந்த வாகனத்திற்குத் துல்லியமான இயக்கத்தையும் வேகத்தையும் தரும்.
பயணிகளுக்கான வசதிகளாக, இரண்டாவது வரிசை லவுஞ்ச் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வெப்பமூட்டும், குளிரூட்டும் மற்றும் மசாஜ் வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், காரில் பெரிய தொடுதிரை, ஸ்பிளிட் சன்ரூஃப், என பலவிதமான பிரீமியம் அம்சங்களும் உள்ளன. இந்த MPV-யின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
MG M9, இந்தியா சந்தையில் தற்போது உள்ள உயர்தர MPV-களான Toyota Vellfire, Kia Carnival போன்றவற்றுக்கு நேரடி போட்டியாளராக அமைவதோடு, பெரிய குடும்பங்களுக்கு மற்றும் ஆடம்பர பயணத்தை விரும்புபவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BMW 2 சீரிஸ் கிரான் கூபே ஃபேஸ்லிஃப்ட்: பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புகழ்பெற்ற 2 சீரிஸ் கிரான் கூபே மாடலின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு செடானில், பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது, இது சிறந்த செயல்திறனை வழங்கும்.
புதிய வளைந்த டிஜிட்டல் டேஷ்போர்டு, மேலும் மெருகேற்றப்பட்ட கூர்மையான வெளிப்புற வடிவமைப்பு என கண்ணை கவரும் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் தோற்றம் முந்தைய பதிப்பைவிட பிரீமியமாகவும் காணப்படுகிறது. BMW 2 சீரிஸ் கிரான் கூபேவின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45 லட்சம் முதல் ரூ.47 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சொகுசு கார்களை விரும்பும் இளம் வாடிக்கையாளர்களுக்கான இந்த புதிய BMW மாடல், புதிய டெக்னாலஜி மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV 3XO: மஹிந்திரா நிறுவனம் தனது மினி SUV மாடலான XUV 3XO காரை ஜூலை மாதத்தில் புதிய வகைகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதுப்பிப்பில் எஞ்சின் மற்றும் வெளி வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், புதிய வகைகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படுவதால், இது முந்தையதைவிட மேலும் பல வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SUV பிரிவில் புதியதாக ஒரு வாகனத்தை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகவும் பயனுள்ள விருப்பமாக அமையும்.
Read more: வீட்டிற்கு ஒருவர்.. தெருவிற்கு இருவர்.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் சொன்ன முக்கிய அறிவுரைகள்..