மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பின், இப்போது முதல் முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகமாகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை அனைத்தும் இருக்கை (சீட்டிங்) வசதியுடன் மட்டுமே இருந்தன. ஆனால், இந்த ஸ்லீப்பர் ரயில் நீண்ட தூர பயணங்களுக்கு சொகுசான அனுபவத்தை வழங்கவுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவலின்படி, கடந்த மாதம் குஜராத்தின் பாவ்நகரில் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ரயிலின் முதல் ரேக் தயாராகிவிட்டதாகவும், கள சோதனைகள் முடிந்துவிட்டதாகவும் அறிவித்தார். விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் ஸ்லீப்பர் ரயில் எந்த மாநிலத்தில், எந்த பாதையில் இயங்கும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அதிக நெரிசலான நீண்ட தூர பாதைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பாயும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு விமானப் பயண அனுபவம் அளிக்கும்விதமாக விசாலமான பெர்த்கள், ஒருங்கிணைந்த வாசிப்பு விளக்குகள், USB சார்ஜிங் பாயிண்ட்கள், அறிவிப்பு மற்றும் காட்சி தகவல் அமைப்புகள் ஆகியவை வழங்கப்படும்.
ஒவ்வொரு பெட்டியிலும் CCTV கேமராக்கள், காட்சிப் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள், மேலும் முதல் ஏசி முன்பதிவு பயணிகளுக்கு சூடான நீரில் குளிக்கும் வசதியும் இருக்கிறது. அரசு தரப்பில், இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகளை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட தூர பயணங்களில் விமானத்துடன் போட்டியிடும் சொகுசு அனுபவத்தை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: 510 கி.மீ. ரேஞ்ச்.. மூன்று புதிய வேரியண்ட்களுடன் கிரெட்டா EV-யை அப்டேட் செய்த ஹூண்டாய்..!!