தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
அதே போல் கடந்த மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. இந்த விபத்துகள் அரசுப் பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. மேலும், பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க மேலாளர்களுக்கு அரசுப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.. அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவதை கண்காணித்து அறிக்கை வழங்கவும் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது..
அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது..
மேலும் “ டயர்களில் வீல் நட்டுகள் இறுக்கமாக இருக்கிறதா என்பதை பேருந்தை எடுக்கும் போதும் நிறுத்தும் போதும் ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டும்.. பிரேக் சரியாக இருக்கிறதா? என்பதை சோதித்த பின்னரே பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு டெப்போவில் இருந்து எடுக்க வேண்டும்.. பேருந்தில் பழுது இருப்பது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் புகார் அளித்தால் மேலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..



