இந்தியாவின் மிகவும் பிரசித்து பெற்ற கோயில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது.. இங்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.. பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகள் கொண்டு வருகிறது..
அந்த வகையில் தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், திருமலையில் உள்ள முக்கிய அன்னபிரசாத மையத்தில் தினசரி மெனுவில் வடையும் சேர்க்கப்பட்டுள்ளது..
எனவே இனி மதிய உணவு மற்றும் இரவு உணவு நேரங்களில், பக்தர்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை வடைகளும் வழங்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதிய உணவின் போது வடை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இரவு உணவிலும் பக்தர்களுக்கு வடைகள் பரிமாறப்படுகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, திருப்பதி தேவஸ்தான், தினமும் சுமார் 75,000 வடைகளை தயாரித்து வருகிறது. பிரம்மோற்சவங்கள் மற்றும் பிற திருவிழாக்கள் போன்ற உச்ச காலங்களில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேர்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில், திருமலையின் தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில் TTD தலைவர் பி.ஆர். நாயுடு சிறப்பு பூஜை செய்தார். சுவாமிக்கு வடையை நைவேத்தியம் செய்த பின்னர் பக்தர்களுக்கு நேரில் வழங்கினார். ஊடகங்களிடம் பேசிய அவர், திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரமான, சுகாதாரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதே திருப்பதி தேவஸ்தானத்தின் நோக்கம் என்று கூறினார்.
மேலும் “மதிய உணவின் போது ஏற்கனவே வடைகள் வழங்கப்பட்டாலும், இப்போது இரவு உணவிற்கும் பிரசாதத்தை விரிவுபடுத்தியுள்ளோம். கடலை மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சோம்பு போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன, அவை பக்தர்களின் ரசனைக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
தினசரி அன்னபிரசாத மெனுவில் பொதுவாக சட்னி, இனிப்பு, சாதம், பருப்பு, சாம்பார், பொறியல் அல்லது கூட்டு , ரசம் மற்றும் மோர் ஆகியவை அடங்கும்.. தற்போது இந்த மெனுவில் வடையும் சேர்க்கப்பட்டுள்ளது.. இருப்பினும், திருமலை முழுவதும் உள்ள மற்ற 36 விநியோக மையங்களில் இன்னும் வடை வழங்கப்படவில்லை.., பிரதான அன்னபிரசாத மையத்தில் மட்டுமே வடைகள் கிடைக்கும்.
TTDயின் அன்னபிரசாத அறக்கட்டளை சமீபத்தில் 40 ஆண்டுகால சேவையை நிறைவு செய்தது. இது தினமும் 1.7 லட்சம் முதல் 1.9 லட்சம் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறது, வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 2.2 லட்சமாகவும், முக்கிய பண்டிகைகளின் போது 3 லட்சமாகவும் உயர்கிறது. உணவு மட்டுமின்றி தினமும் சுமார் 41,000 பக்தர்களுக்கு பால், காபி மற்றும் மோர் வழங்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 65,000 பக்தர்களுக்கு காலை உணவும், 77,000 பேருக்கு மதிய உணவும், 51,000 பேருக்கு இரவு உணவும் வழங்கப்படுகிறது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு நாளும் சுமார் 12 டன் அரிசி, 7 டன் காய்கறிகள் மற்றும் 6,000 லிட்டர் பால் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : திடீரென முடங்கிய Canva.. டிசைன்களை எடிட் செய்ய முடியாததால் பயனர்கள் அவதி..