ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் நிதித்துறையிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், சாமானிய மக்களின் அன்றாட பணப் பரிவர்த்தனைகள், சொத்து விற்பனை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. வரி செலுத்துவோருக்குச் சில சலுகைகளையும், அதே சமயம் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் இந்த புதிய விதிகள் முன்வைக்கின்றன.
புதிய விதிகளின்படி, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களுக்குப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ பான் கார்டு கட்டாயமாக இருந்த நிலையில், இனி ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண் வழங்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவகங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்பவர்களுக்கும், 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் கார் அல்லது பைக் வாங்குபவர்களுக்கும் பான் கார்டு சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் சிறு முதலீடுகள் மற்றும் செலவுகளை எளிதாக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
சொத்து வாங்குபவர்களுக்கும் இந்த முறை மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. முன்னதாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு கட்டாயம் என்ற நிலை இருந்தது; தற்போது இந்த வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (NRI) இருந்து சொத்து வாங்குபவர்கள் இனி ‘TAN’ எண் பெற அலைய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாகத் தங்களின் பான் எண்ணைப் பயன்படுத்தியே டி.டி.எஸ் (TDS) தொகையைக் கழிக்க முடியும். இந்த நடைமுறைச் சிக்கல் குறைப்பு ரியல் எஸ்டேட் துறையில் பணப் பரிவர்த்தனைகளை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களுக்கும் இனி பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெரிய தொகை கொண்ட பாலிசிகளுக்கு மட்டுமே இந்த விதி இருந்தது, ஆனால் இனி எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தாலும் பான் எண் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. அதே சமயம், மனிதநேய அடிப்படையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முழுத்தொகையும் எவ்வித வரிப் பிடித்தமுமின்றி போய் சேரும்.
மேலும், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத சிறு வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஐடிஆர் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் ITR-1, ITR-2 படிவங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை; அவர்கள் வழக்கம்போல ஜூலை 31-க்குள் தங்களது வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.



