சித்தர்களின் குகை முதல் விபூதி மலை வரை..!! மகா சிவராத்திரிக்கு வெள்ளியங்கிரி போறீங்களா..? இந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

Velliangiri Hills 2026

கோவை மாநகரின் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி மலை, ஆன்மீக உலகில் ‘தென்கயிலை’ என்ற உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எப்படி ஏழு மலைகளை கடக்க வேண்டுமோ, அதேபோல் இங்கு ஏழாவது மலையின் உச்சியில் சுயம்புவாக வீற்றிருக்கும் சிவபெருமானை காண ஏழு மலைகளை கடக்க வேண்டும். ஆனால், இந்தப் பயணம் வெறும் நிலப்பரப்பை கடப்பதல்ல; நம் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்தி மையங்களை (சக்கரங்களை) ஒவ்வொன்றாக கடந்து செல்லும் ஒரு யோகப் பயணம் என்று மெய்ஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.


மலையேற்றத்தின் தொடக்கமான முதல் மலை, நம் உடலின் அடிப்படை ஆதாரமான ‘மூலாதார’ சக்கரத்தை குறிக்கிறது. இங்குள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலை அடைவது, நம் வாழ்வின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதற்கு சமம். முதல் மலையை ஏறி முடித்தாலே ஏறக்குறைய 40 சதவீத சவால்களை கடந்துவிட்டதாக கருதப்படுகிறது. கடினமான பாதைகளை கொண்ட இரண்டாவது மலை, ‘சுவாதிஷ்டான’ சக்கரத்தை உணர்த்துகிறது. இது ஒரு பக்தனின் மன உறுதியையும் உடல் வலிமையையும் சோதிக்கும் களமாகும்.

அதனைத் தொடர்ந்து வரும் மூன்றாவது மலை, ‘மணிப்பூரக’ சக்கரத்தை குறிக்கிறது. சித்தர்களின் நடமாட்டம் நிறைந்ததாக கருதப்படும் இந்த மலையின் உச்சியில், பாம்பாட்டி சித்தர் தவம் செய்த புனித குகை இன்றும் பக்தர்களுக்கு ஆன்மீக அதிர்வுகளை தருகிறது. நம் மார்புப் பகுதியில் இருக்கும் அனாகத சக்கரத்தை குறிக்கும் நான்காவது மலை, பல யோகிகள் தவம் புரிந்த அமைதியானப் பிரதேசமாகும். தொண்டைப்பகுதியின் ‘விசுத்தி’ சக்கரத்தை உணர்த்தும் ஐந்தாவது மலை, மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்கி மனதை லேசாக்கும் சக்தியை கொண்டுள்ளது.

ஆறாவது மலையானது, இரு புருவங்களுக்கு இடைப்பட்ட ‘ஆக்ஞை’ சக்கரத்தைக் குறிக்கிறது. இங்கு ஒட்டன் சித்தரின் சமாதி அமைந்துள்ளதுடன், இம்மலை ‘விபூதி மலை’ என்றும் போற்றப்படுகிறது. இங்கிருந்து வீசும் காற்றில் கூட ஒருவிதத் தெய்வீக மணம் கமழ்வதை உணர முடியும். இறுதியாக எட்டப்படும் ஏழாவது மலை, நம் உச்சந்தலையில் இருக்கும் ‘சகஸ்ரார’ சக்கரத்தைக் குறிப்பதாகும். இதுவே ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் உன்னத நிலையாகும். பனிபடர்ந்த இந்தக் குகையில், ஆதி பரம்பொருளான சிவபெருமான் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். சிவபெருமானின் மூன்றாவது கண் திறந்த இடமாகக் கருதப்படும் இப்பகுதி, ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி போன்றது.

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும், உடல் நடுங்க செய்யும் ஒருவித தெய்வீக உணர்வை பெறுவது வழக்கம். வெறும் திகில் அல்லது மர்மம் நிறைந்த இடமாக இல்லாமல், ஒரு மனிதனை தனக்குள்ளேயே பயணிக்க செய்து, இறுதியில் சிவனை தரிசிக்க வைக்கும் இந்தப் பயணம் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரையாகும்.

Read More : மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருப்பது ஏன்..? விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன..?

CHELLA

Next Post

60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 வேண்டுமா..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Feb 14 , 2026
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அமைப்புசாரா தொழிலாளர்களின் முதுமை கால நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்’ (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் 60 வயதிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் […]
Pension 2025

You May Like