2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிப் பேச்சுகளும் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதால், தங்களின் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளத் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் தற்போதைய தொகுதிகளை மாற்றிக் களம் காணத் தயாராகி வருகின்றனர்.
ஆளுங்கட்சியான திமுகவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தனது தற்போதைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து நகர்ந்து, டெல்டா மாவட்டமான திருவாரூரை குறிவைப்பதாக தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோட்டையாகக் கருதப்படும் திருவாரூரில் போட்டியிடுவதன் மூலம், தனது அரசியல் செல்வாக்கை மாநில அளவில் உறுதிப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மூத்த அமைச்சர் பொன்முடி தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது திருக்கோவிலூர் தொகுதியை விட்டுவிட்டு, விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்யக்கூடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் முக்கிய முகமான சிவி சண்முகம், இந்த முறை விழுப்புரத்திற்கு பதிலாக மயிலம் தொகுதியைத் தனது தேர்தல் களமாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இது வடமாவட்ட அரசியல் சூழலில் ஒரு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. மற்றொரு புறம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் தடம் பதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளார். இதற்காக தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியை அவர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவை பொறுத்தவரை, மேற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க அக்கட்சி தலைமை முனைப்புக் காட்டி வருகிறது. கோவை தெற்குத் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்குத் தொகுதிக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை அல்லது திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு முக்கியத் தொகுதியைக் குறிவைத்துக் களம் காண தயாராகி வருகிறார். இவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.



