புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அமைந்துள்ள முத்து கருப்பையா சாமி ஆலயம், அப்பகுதி மக்களின் முக்கிய காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. நூற்றாண்டுகளாக சிறப்பு பெற்ற இந்த ஆலயம், “வேண்டியது அனைத்தும் நிறைவேறும் தலம்” என பக்தர்களிடையே நம்பிக்கை பெற்றுள்ளது.
முத்து கருப்பையா சாமியை வழிபட்டால் குடும்பத்தில் நன்மை ஏற்படும், திருமண வரம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, சித்திரை மாத திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறுகிறது. ஏழு நாட்கள் நீடிக்கும் இந்த விழாவில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலயத்தின் முக்கிய விழாக்களில் சித்திரை திருவிழா, குதிரை எடுப்பு திருவிழா, கிடா வெட்டு திருவிழா ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கருப்பசாமிக்கு வேண்டுதல் வைத்து கிடாயை பலி கொடுத்தால் வேண்டியதை நிறைவேற்றுவார் என்ற ஆழமான நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
திருமண வரம் வேண்டுவோர் வண்ணாத்தாலுக்கு வளையல் அணிவித்து வழிபடுவர்; குழந்தை வரம் வேண்டுவோர் மரத்தொட்டில் கட்டி கருப்பசாமியை வேண்டி கிடாயை பலி கொடுத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்வாறு வேண்டியவர்கள் பிள்ளைப் பாக்கியம் பெற்ற சம்பவங்களும் பல உள்ளதாக பக்தர்கள் பகிர்கின்றனர்.
இக்கோவிலில் கருப்பசாமி, வண்ணாத்தால், பகவதி அம்மன், காப்பு முனி, சங்கிலி கருப்பு, மதுரை வீரன், தூண்டி கருப்பு உள்ளிட்ட தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. பக்தி, நம்பிக்கை, அருளின் கலவையாக விளங்கும் இந்த முத்து கருப்பையா சாமி ஆலயம், புதுக்கோட்டையிலும் சுற்றுவட்டாரத்திலும் பக்தர்களின் மனங்களில் உறுதியான இடத்தை பெற்றுள்ளது.
Read more: தீபாவளியன்று இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால்.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்..!