உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக பழச்சாறு டயட்டில் இருந்த மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பர்ணட்டிவிளையைச் சேர்ந்த 17 வயது மாணவர் சக்தீஷ்வர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஷ்வர், தனது உடல் பருமனைக்குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கருதி, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் காணப்படும் வீடியோக்களைப் பார்த்து வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கினார்.
முழுக்க முழுக்க பழச்சாறு மட்டும் குடித்தும், உடற்பயிற்சி செய்தும் மூன்று மாதங்கள் கழித்து, உடல் பலவீனமடைந்த நிலையில், சளி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று காலை வீட்டில் மயங்கி விழுந்தார். அவரது பெற்றோர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்தனர். போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீஸார் கூறுகையில், “உடல் எடையைக் குறைக்கும் முயற்சி என்பது மருத்துவ ரீதியாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இணையத்தில் காணப்படும் வீடியோக்கள் எல்லாம் அனைவருக்கும் பொருந்தாது. எளிதான தீர்வு என நினைத்து தவறான வழிகளைத் தேர்வு செய்தால் உயிரிழப்பும் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் பதிவுகளின் பேரில் மருத்துவ ஆலோசனை இன்றி ஆரோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மிகவும் அவசியமானது.
சோகத்தில் மூழ்கிய சக்தீஷ்வரின் பெற்றோர், அவரது கண்களை தானமாக அளித்துள்ளனர். இது அவரது இறுதிப் பயணத்தில் ஏதேனும் ஓர் மனித நேயத்தைக் கொண்டுவரும் செயல் என்ற வகையில் பெரும் பரிவையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Read more: #Flash : ஹேப்பி நியூஸ்.. இன்றும் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்…