பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.
நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது. அதுமட்டுமல்லாமல், ஒளி வருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலம் மெய் தன்மை உறுதி செய்யப்படும்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத்துறை ஐஜி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். நம்பிக்கை இணையம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைத்து சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கென அலுவலகத்தில் மட்டுமே செயல்படத்தக்க வகையிலான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை பொதுமக்கள் கோரினால், உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவற்றை வழங்கலாம்.. ஆனால், அப்படி வழங்கும்போது, நம்பிக்கை இணையத்தின் இலச்சினை சான்றிட்ட நகரின் இடதுபுறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அவ்வாறு அச்சிடப்பட்டிருந்தால் அந்த ஆவணங்கள் நம்பிக்கை இணையம் வழிசரிபார்க்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும்.
Read more: தீவிரமடையும் மோதல்: ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் இணையாதது ஏன்..?