தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் இந்த முறை கூடுதல் இடங்களை கேட்போம் என்று அறிவித்துள்ளன. மறுபுறம், அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. எனினும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தனித்த ஆட்சி என்று இபிஎஸ் கூறி வருகிறார்..
சீமான் தனித்து போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த முறை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் விஜய்யின் தவெக, பாஜக திமுக உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது..
இந்த சூழலில் தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அதற்கேற்றார் போலவே பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், அதிமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசமால் இருந்து வருகிறார். இதனால் அதிமுக உடன் தவெக கூட்டணி என்பது உறுதி என்றாலும், பாஜக இருக்கும் கூட்டணியில் விஜய் எப்படி இணைவார்? அதிமுக எவ்வளவு சீட் வழங்கும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை எப்படி முடிவு செய்வார்கள் என்பதில் முரண்பாடு இருக்கும் என்றே கூறப்படுகிறது.. ஏனெனில் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று விஜய் கூறி வருகிறார், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடும் இதே தான்..
இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு வரும் 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஒருபுறம் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சி தலைமை கூறி வரும், நிலையில் கட்சித் தொண்டர்களின் மனநிலை வேறாக உள்ளது.. தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என்று கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆனந்த் கையில் வாளை கொடுத்து, வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று ஆர்பரித்து கோஷமிடுகின்றனர்.. ஆனந்தும் அதை வெகுவாக ரசிப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.. இந்த வீடியோவுக்கு தவெகவினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
என்.ஆனந்த் வருங்கால முதலமைச்சர் என்று தவெக தொண்டர்கள் கூறுவது இது முதன்முறையல்ல.. முன்னதாக கடந்த மார்ச் மாதம் தவெகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற போது, “ பொதுச்செயலாளர் வருங்கால தமிழக முதலமைச்சர்: என்று போஸ்டர் ஓட்டப்பட்டது.. இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், வேண்டுமென்றே சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியுள்ளனர்..” என்று ஆனந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..