சமீப காலமாக பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முதலீட்டு இணையதளங்கள் மூலமாக மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நடிகை சுருதிஹாசன், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றவர் உன்னி முகுந்தன். ‘மாளிக்கப் புரம்’ படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் ஈர்த்தவர் மார்கோ படத்தால் இந்தியளவில் பிரபலமானார். கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாகதான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
Read more: அஜித்குமார் மரண வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!!