டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, பின்னர் யூடியூப், பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜி.பி. முத்துவின் இரு மகன்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்து மகேஷ் என்பவர் குழந்தைகளை ஏளனம் செய்யும் விதமாகவும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியதாக கூறப்படுகிறது. “உங்கள் அப்பாவைப் போலவே ஆகப்போகிறீர்களா?” என்று அவர் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள், பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஜி.பி. முத்துவும் அவரது மனைவியும் உறவினர்கள் சிலருடன் முத்து மகேஷ் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளனர். இந்தச் சண்டையின்போது, முத்து மகேஷின் மனைவி பால அமுதா என்பவரை ஜி.பி. முத்து மற்றும் அவரது மனைவி உட்பட 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் பால அமுதாவுக்கு மண்டை உடைந்து, பற்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த பால அமுதா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் ஜி.பி. முத்து உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஜி.பி. முத்து கூறுகையில், “ஊருக்குள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்டதால், பழிவாங்கும் நோக்குடன் தங்கள் மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முத்து மகேஷ் முதலில் எனது மகன்களை தாக்கியதாலேயே நாங்கள் அவர் வீட்டுக்குச் சென்று பேசினோம். மற்றபடி எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : துளசி இலைகளை பறிப்பதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கா..? இந்த நாளில் தொடவே தொடாதீங்க..!!



