பணியிடங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் மனநலத்திற்கான முக்கியத்துவம் குறித்து இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது, ஒரு Gen Z ஊழியரின் நேர்மையான லீவு லெட்டர். சமீபத்தில் பிரேக்-அப் ஆனதால் 12 நாள் விடுப்பு கேட்ட அந்த ஊழியரின் மின்னஞ்சல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஊழியரின் வெளிப்படையான குணத்தைப் பாராட்டிய தலைமைச் செயல் அதிகாரி விடுப்பை உடனடியாக அனுமதித்தது நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது. குருகிராமில் உள்ள Knot Dating என்ற நவீன ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO ஜஸ்வீர் சிங் தனது X பக்கத்தில் அந்த மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தார்.
அந்த மின்னஞ்சலில் ஊழியர் “சார், எனக்கு சமீபத்தில் பிரேக்-அப் ஆகிவிட்டது. மனம் சரியில்லை, வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இன்று வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், 28ம் தேதி முதல் 8ம் தேதி வரை விடுப்பு எடுக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மின்னஞ்சலின் நேர்மையால் ஈர்க்கப்பட்ட ஜஸ்வீர் சிங், “இது இதுவரை பார்த்ததில் மிகவும் நேர்மையான லீவு லெட்டர்,” என்று குறிப்பிட்டார்.
“நீங்கள் விடுப்பை அனுமதித்தீர்களா?” என்று ஒரு பயனர் கேட்டார். அதற்கு அவர் “விடுப்பு உடனடியாக அனுமதிக்கப்பட்டது,” என்று பதிலளித்தார். இந்த முடிவு பலரிடமும் பாராட்டைப் பெற்றது. ஒரு பயனர், ஊழியரின் மன நிலையை உணர்ந்து நீங்க எடுத்த முடிவு அருமையானது. நீங்க ஒரு சிறந்த பாஸ்!” என்று பாராட்டியிருந்தார். மற்றொரு பயனர், “Gen Z பிரேக்-அப் ஆனா லீவு போடுறாங்க. ஆனா, Millennials பிரேக்-அப் ஆகி, வாஷ்ரூமில் அழுதுட்டு வந்து, வேலையை முடிச்சிடுவாங்க என்று கூறினார்.



