இந்தியா, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த நாடு. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் சில பழக்கவழக்கங்கள், காலப்போக்கில் மூடநம்பிக்கைகளாகவும் பார்க்கப்படுகின்றன. கருப்புப் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம், வீட்டு வாசலில் எலுமிச்சை என நாம் அன்றாடம் பார்க்கும் இந்த நம்பிக்கைகளுக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கருப்புப் பூனை குறுக்கே போவது : இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் இந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. பண்டைய எகிப்தில் கருப்புப் பூனைகள் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்பட்டன. இந்தியாவில், கருப்பு நிறம் சனி பகவானுக்கு உரியது. கருப்புப் பூனை குறுக்கே போனால், அது சனியின் துன்பங்களைக் கொண்டு வரும் என்றும், வேறு யாராவது கடந்து செல்லும் வரை காத்திருந்தால், அந்த கெட்ட நேரம் அவர்களுக்குச் சென்றுவிடும் என்றும் நம்பப்படுகிறது.
பரிசுப் பொருட்களில் ஒரு ரூபாய் சேர்ப்பது : திருமணம் அல்லது விசேஷங்களில் ரூ.100-க்கு பதிலாக ரூ.101 கொடுப்பது இந்தியர்களின் வழக்கம். இந்த ஒரு ரூபாய் நாணயம் நல்ல அதிர்ஷ்டம், தொடர்ச்சி மற்றும் அன்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பூஜ்ஜியத்தில் முடியும் தொகை, ஒரு விஷயத்தின் முடிவைக் குறிக்கும் என்பதால், புதிய தொடக்கங்களுக்கு அது நல்லதல்ல. எனவே, ஒரு ரூபாய் சேர்த்து ஒற்றைப்படை எண்ணாக மாற்றி, தொடர்ச்சியை உணர்த்தும் வகையில் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
எலுமிச்சை மற்றும் மிளகாய் தொங்கவிடுதல் : கடைகள் மற்றும் வீடுகளின் வாசலில் எலுமிச்சை மற்றும் 7 பச்சை மிளகாய்களை தொங்கவிடுவது ஒரு பாரம்பரிய வழக்கம். துரதிர்ஷ்ட தேவதை புளிப்பு மற்றும் காரமான உணவுகளை விரும்புவாள் என்று நம்பப்படுகிறது. எனவே, அவளது பசியை திருப்திப்படுத்த இவற்றை வாசலில் வைப்பதால், அவள் வீட்டிற்குள் வராமல் திரும்பிச் சென்றுவிடுவாள். இது வியாபாரத்தில் கெட்ட சக்திகளைத் தவிர்க்கும் ஒரு நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
மாலையில் வீட்டை பெருக்குவது : சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டைப் பெருக்குவது அசுபமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், லட்சுமி தேவி செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியவள். அவள் மாலையில் வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டை பெருக்கினால், லட்சுமியை வெளியே விரட்டுவது போலாகும் என்று கருதுகிறார்கள். பழங்காலத்தில், போதிய வெளிச்சம் இல்லாததால், விலை உயர்ந்த பொருட்களை தவறுதலாகக் குப்பையில் போட்டுவிடாமல் இருக்க உருவான பழக்கமே இது.
கண் துடிப்பது : ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லதும், இடது கண் துடித்தால் கெட்டதும் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதும், வலது கண் துடித்தால் கெட்டதும் நடக்கும் என்பது நம்பிக்கை. இது பண்டைய ஜோதிடத்தின் அடிப்படையில் உருவானது. ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, கண் துடிப்பது மன அழுத்தம், சோர்வு அல்லது தூக்கமின்மை போன்ற உடல்நலக் காரணங்களால் ஏற்படலாம்.
இரவில் அரச மரத்தடியில் செல்லக்கூடாது : அரச மரத்தடியில் பேய்கள் வசிப்பதாகவும், இரவில் அங்கு சென்றால் காயங்கள் ஏற்படும் என்றும் கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஆனால், இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. மரங்கள் இரவில் ஒளிச்சேர்க்கை நடைபெறாததால் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. அரச மரம் அதிகளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இரவு நேரத்தில் அந்த மரத்தடியில் சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதைத் தவிர்க்க, பேய் இருப்பதாக ஒரு கட்டுக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி உடைதல் : கண்ணாடி உடைந்தால் 7 வருடங்கள் கெட்ட நேரம் வரும் என்ற நம்பிக்கை பண்டைய ரோமானியர்களிடமிருந்து வந்தது. அக்காலத்தில் கண்ணாடிகள் விலை உயர்ந்ததாகவும், அரிதாகவும் இருந்தன. கவனக்குறைவால் அதை உடைக்காமல் இருக்க இந்த நம்பிக்கை உருவானது. ரோமானியர்கள், ஒருவரின் பிரதிபலிப்பு அவரது ஆன்மாவின் ஒரு பகுதி என்று நம்பினர். கண்ணாடி உடைவது ஆன்மாவை பாதிக்கும் என்றும், 7 வருடங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்றும் நம்பினர்.
Read More : தீராத தோல் வியாதிகளை குணப்படுத்தும் கஞ்சமலை சித்தர் கோவில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?