மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், எம்.பி.ஏ படித்து வந்த மாணவி சோனம் (24) என்பவரின் கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பியூஷ் தாம்னோடியா என்பவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரிவை ஏற்க முடியாத ஆத்திரமே இந்த விபரீத முடிவுக்கு காரணமாகியுள்ளது. பெற்றோரின் பேச்சை கேட்டு சோனம் தன்னை தவிர்க்க தொடங்கியதை அறிந்த பியூஷ், “தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது” என்ற வஞ்சத்துடன் பிப்ரவரி 10-ம் தேதி சோனத்தை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு நடந்த வாக்குவாதத்தில் சோனத்தைக் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் பியூஷ் படுகொலை செய்துள்ளார்.
இந்த கொலையை விடவும் அதன்பின் பியூஷ் செய்த செயல்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளது. சோனத்தின் சடலத்தை கயிறு மற்றும் காலுறைகளால் கட்டிவிட்டு, அருகில் அமர்ந்து மது அருந்திய பியூஷ், இறந்த காதலியின் சடலத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சோனத்தின் தந்தைக்கு “வீட்டிற்கு வரமாட்டேன்” என அவர் பெயரிலேயே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மும்பைக்குத் தப்பியுள்ளார்.
மும்பையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபோது, செய்த குற்றத்தால் ஏற்பட்ட பயம் மற்றும் குற்ற உணர்வில், “ஆவியை வரவழைப்பது எப்படி?” என இணையத்தில் தேடி, காட்டில் மாந்திரீக சடங்குகளை செய்து சோனத்தின் ஆவியிடம் மன்னிப்புக் கேட்க முயன்றுள்ளார். இதற்கிடையே, சோனம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. பின்னர், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து மும்பையில் பியூஷை கைது செய்த போலீசார், தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



