இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை வைப்பது, பிபிஏ (BPA) மற்றும் தாலேட்ஸ் (Phthalates) போன்ற நச்சு ரசாயனங்களை உணவில் கலந்து, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் என்பது பரவலான விழிப்புணர்வாக மாறியுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான மக்கள் மீண்டும் பழையபடி சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரங்களுக்கு மாறி வருகின்றனர். இவை இரண்டுமே பாதுகாப்பானவை என்றாலும், பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் என்று வரும்போது இரண்டிற்கும் இடையே மெல்லிய வேறுபாடுகள் உள்ளன.
கண்ணாடிப் பாத்திரங்கள் :
உணவின் சுவையோ, மணமோ மாறாமல் இருக்க வேண்டும் என்பவர்களுக்குக் கண்ணாடிப் பெட்டிகளே முதல் தேர்வு. இவை உணவோடு எந்த விதமான வேதியியல் வினைகளையும் புரிவதில்லை என்பதால், மிக நீண்ட நேரம் உணவைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக, அலுவலகங்களில் மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்துபவர்களுக்குக் கண்ணாடிப் பெட்டிகள் வரப்பிரசாதம். ஆனால், இவற்றைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை; கீழே விழுந்தால் உடைந்துவிடும் அபாயம் இருப்பதால் குழந்தைகளுக்கும், நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கும் இது சற்றே சிரமமான தேர்வாக அமையும்.
எவர்சில்வர் :
இந்திய குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக எவர்சில்வர் பாத்திரங்கள் நீக்கமற நிறைந்திருக்க காரணம் அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மையே. இவை எடை குறைந்தவை, விழுந்தால் உடையாது மற்றும் எடுத்துச் செல்ல மிகவும் வசதியானவை. உணவை ஓரளவிற்குச் சூடாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. இருப்பினும், தரம் குறைந்த சில்வர் பாத்திரங்களில் அதிக புளிப்பு அல்லது உப்பு நிறைந்த உணவுகளை நீண்ட நேரம் வைக்கும்போது, அவை உலோகத்துடன் வினைபுரிந்து சுவையை மாற்றக்கூடும். மேலும், வழக்கமான சில்வர் பாத்திரங்களை மைக்ரோவேவில் பயன்படுத்த முடியாது என்பதும் ஒரு கூடுதல் குறைபாடாகும்.
எந்த சூழலுக்கு எது சிறந்தது..?
தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது நெரிசலான பொதுப் போக்குவரத்தில் அலுவலகம் செல்பவர்களுக்கோ சில்வர் டிபன் பாக்ஸ்களே சிறந்த நடைமுறைத் தேர்வாகும். ஏனெனில் அவை பாதுகாப்பானவை மற்றும் எளிதில் சேதமடையாது. அதேநேரம், வீட்டில் உணவைச் சேமித்து வைக்கவோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைக்கவோ கண்ணாடிப் பாத்திரங்களே மிகச்சிறந்தவை. உங்கள் அலுவலகத்தில் உணவைச் சூடுபடுத்தும் வசதி இருந்தால், கண்ணாடியைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.
குறிப்பு : ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எவ்வித ரசாயனக் கசிவும் இல்லாத ‘கண்ணாடி’ முதலிடம் பிடிக்கிறது. அதேநேரம், அன்றாடப் பயன்பாடு, உறுதி மற்றும் வசதியைப் பொறுத்தவரை ‘எவர்சில்வர்’ இன்றும் முதன்மையானதாக இருக்கிறது. உங்கள் வாழ்வியல் தேவை மற்றும் கையாளும் வசதியைப் பொறுத்துச் சரியானதை தேர்ந்தெடுப்பதே உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு நல்லது.



