தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலும்பு பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண க்ளூ கன் (Glue Gun) மாற்றி, 3D பிரிண்ட் முறையில் எலும்பு போன்ற பொருளை நேரடியாக முறிவு ஏற்பட்ட இடங்களில் அச்சிடும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
உயிரியல் பொறியாளர் ஜங் ஸுங் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, மாற்றியமைக்கப்பட்ட க்ளூ கன்-ஐ பயன்படுத்தி, முறிவு ஏற்பட்ட எலும்புப் பகுதிகளில் நேரடியாக எலும்பு போன்ற பொருளை அச்சிடக்கூடிய 3D பிரிண்டிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்த கருவி இதுவரை முயல்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்தப் புதுமையான அணுகுமுறை, சிக்கலான எலும்பு முறிவுகளைச் சிகிச்சையளிக்கச் சிறந்ததும், வேகமானதும் ஆக இருப்பதால் எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.” என்று தெரிவித்தனர்.
தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியாளர் மற்றும் ஆய்வு ஆசிரியர் ஜங் ஸுங் லீ இதுகுறித்து பேசிய போது “எங்களது முன்மொழியப்பட்ட தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திலேயே (in situ) 3D பிரிண்டிங் மூலம் தாங்கும் தளத்தை (scaffold) நேரடியாக உடனடியாக உருவாக்கி பயன்படுத்தும் தனித்துவமான முறையை வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.
மேலும் “இதன் மூலம், படமெடுக்கும் செயல்முறை, மாதிரி உருவாக்கம் அல்லது வெட்டித் திருத்துதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் தயாரிப்புகள் இன்றி, முற்றிலும் சீரற்ற அல்லது சிக்கலான குறைபாடுகளிலும் கூட, மிகத் துல்லியமான உடல் அமைப்புச் சேர்ந்த பொருத்தத்தைப் பெற முடிகிறது.” என்று கூறினார்..
இந்த ஆய்வில், எலும்பு மாற்று பொருட்கள் பாலிகாப்ரோலக்டோன் (Polycaprolactone – PCL) மற்றும் ஹைட்ராக்ஸிஅபடைட் (Hydroxyapatite – HA) கொண்டு உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறைந்த உருகும் வெப்பநிலை கொண்ட எக்ஸ்ட்ரூஷன் (extrusion) முறை மூலம், திசுக்களுக்கு சேதம் ஏற்படாமல் குறைபாடுகள் உள்ள இடங்களில் நேரடியாக அச்சிட்டு வடிவமைக்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள், HA அளவையும் PCL-இன் மூலக்கூறு எடையையும் சரிசெய்து, தாங்கும் தளங்களின் (scaffolds) இயந்திர மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்தியுள்ளனர். இதன் மூலம், வடிவமைப்பின் நிலைத்தன்மை, நீண்டகால செயல்திறன், மற்றும் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் (osteoconductivity) ஆகியவை உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தொற்று அபாயத்தை குறைக்க உதவும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More : 40 வயதுக்கு பிறகும் ஆரோக்கியமாக இருக்க.. இந்த 5 பழக்கங்களை உடனே நிறுத்த வேண்டும்..