உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்கள் சீக்கிய மதத்தின் நிறுவனர் ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் பிறந்தநாளான குரு நானக் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் (Guru Nanak பிறந்த இடம்) புனித தலத்திற்குச் செல்ல முயன்ற இந்திய பக்தர்களுக்கு இன்று ஒரு வேதனையான நாளாக மாறியது..
ஹிந்து பக்தர்கள் நுழைய தடை
சீக்கிய யாத்திரீகர்கள் பாகிஸ்தானில் மலர்களாலும் அன்பினாலும் வரவேற்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான் அதிகாரிகள் ஹிந்து பக்தர்களின் நுழைவுக்கு தடை விதித்து அவமதித்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.. இது இந்தியாவில் கடும் எதிர்ப்பை தூண்டியுள்ளது.
இந்தியாவிலிருந்து நன்கானா சாகிப் புனித விழாவில் பங்கேற்க ஒரு குழு பாகிஸ்தானுக்குப் புறப்பட்டிருந்தது. அதில் டெல்லி, லக்னோ மற்றும் பஞ்சாபின் நவான்ஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து குடும்பங்களும் சீக்கிய யாத்திரை குழுவுடன் சேர்ந்திருந்தனர்.
ஆனால், அவர்கள் வாகா எல்லை சென்றவுடன் பயணம் திடீரென நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் குடிவரவு அதிகாரிகளும் காவல்துறையினரும் ஹிந்து பக்தர்களை தனியாக பிரித்து, அவர்களின் மதத்தை கேள்வி எழுப்பி, நுழைவுத் தடை விதித்தனர். மொத்தம் 14 ஹிந்து குடும்பங்கள் இந்தியாவிற்கு திரும்பச் சொல்லப்பட்டனர்.. இது மத அடிப்படையிலான வேறுபாட்டாக பலர் கண்டித்தனர்.
“உங்கள் கோவில்களுக்கே செல்லுங்கள்!” என விரட்டியடிப்பு
எல்லையில் இருந்து திரும்பிய பக்தர்கள் ஸ்ரீ கங்கா ராம் மற்றும் ஸ்ரீ அமர் சந்த் கூறியதாவது: அவர்கள் டெல்லி சிக்ஹ குருத்வாரா மேனேஜ்மென்ட் கமிட்டி (DSGMC) வழியாக சட்டப்படி விசா பெற்றிருந்தனர். ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள், “நீங்கள் சீக்கிய யாத்திரிகர்களுடன் ஏன் வந்திருக்கிறீர்கள்? உங்கள் கோவில்களுக்கே போங்கள்,” என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பக்தர்கள் குரு நானக் தேவ் ஜி மீது சீக்கியர்களுடன் சேர்ந்து ஹிந்துக்களும் அளவில்லா பக்தி கொண்டிருப்பதாக விளக்கினாலும், அதிகாரிகள் தயங்காமல் அவர்களை திருப்பியனுப்பியதாகவும் கூறினர்.
எல்லையில் உடைந்த கனவு
பாகிஸ்தான் எல்லையில் இருந்து திரும்பிய பக்தர்களுக்கு இது மிகுந்த மன வேதனை அளித்தது. பலர் பாகிஸ்தானில்தான் பிறந்து பின்னர் இந்தியாவில் குடியேறியவர்கள். குரு நானக் தேவ் ஜியின் பிறந்த இடமான நன்கானா சாகிப் சென்றுப் பஜனை செய்ய வேண்டும் என்ற பல ஆண்டுகளாகப் பேணிய கனவு சிதறிவிட்டது. “எங்களின் பக்தி அவமதிக்கப்பட்டது போல உணர்ந்தோம்,” என ஒருவர் கண்ணீருடன் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க திட்டம்
இந்தச் சம்பவத்தை இந்திய அரசு மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமான தூதரக வழியாக விளக்கம் கேட்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் செயல்பாடு ஹிந்து–சிக்ஹ ஒற்றுமையை சிதைக்க பாகிஸ்தானின் திட்டமிட்ட முயற்சியாக இந்திய வட்டாரங்கள் கருதுகின்றன.
மேலும், சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையால் இந்தியாவில் மத ஒற்றுமை வலுப்பெற்றிருப்பதால் அதற்கான பதிலடி போல் பாகிஸ்தானின் இச்செயல் பார்க்கப்படுகிறது.



