சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் சரிவு :
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு $0.83 குறைந்து $50.74 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் சந்தை நிலவரம் :
சர்வதேச சந்தையில் நேற்று (நவம்பர் 20) தங்கத்தின் விலை மந்த நிலையில் நீடித்ததின் நேரடி தாக்கமாக, நம் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. உலகச் சந்தையில் தொடர்ந்து சரிவு காணப்படுவதால், இன்றும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



