“மண்ணிலும் பொன்னிலும் போடும் பணம் எப்போதும் வீண் போகாது” என்ற ஒரு பழமொழி முதலீட்டு உலகில் பரவலாகப் பேசப்படுவதுண்டு. அதாவது, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டிலும் செய்யப்படும் முதலீடுகளே நீண்ட காலத்தில் அதிக லாபத்தை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
அதற்கு ஏற்ப, இன்றும் இந்த இரண்டு துறைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான முதலீட்டாளர்கள் மத்தியில், இந்த இரண்டில் எது சிறந்தது அல்லது யாருக்கு எது பொருந்தும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்தக் குழப்பத்தை தீர்க்கும் வகையில், இவ்விரண்டின் சாதக பாதகங்களை விரிவாகப் பார்க்கலாம்.
ரியல் எஸ்டேட் :
ரியல் எஸ்டேட் முதலீட்டை பொறுத்தவரை, அது காலம் காலமாக சிறந்த லாபத்தை தந்த முதலீடாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் முதலீடு செய்தவர்கள், இன்று பொருளாதார ரீதியாக பெரிய நிலையை அடைந்துள்ளதற்கு இந்த முதலீடுதான் காரணம். அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட், ஒரு லாபகரமான சொத்து வகுப்பாக உள்ளது.
ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அனைவருக்கும் ஏற்ற முதலீடா என்றால், நிச்சயம் இல்லை என்றே கூற வேண்டும். காரணம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு பெரிய தொகையும் (Higher Capital), நீண்ட கால நோக்கும் தேவைப்படுகிறது. என்னிடம் கோடிக் கணக்கில் பணம் உள்ளது, அந்தப் பணம் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு எனக்குத் தேவைப்படாது என்று நினைப்பவர்கள், தாராளமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.
மாறாக, உங்களிடம் குறைவான பணமே உள்ளது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் அந்தப் பணத்திற்கான தேவை வரக்கூடும் என்று நினைத்தால், ரியல் எஸ்டேட் உங்களுக்குச் சரியான தேர்வாக இருக்காது. நிலத்தை அல்லது சொத்தை அவசரத் தேவைக்காக உடனடியாகப் பணமாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
தங்கம் :
குறைந்த அளவு பணம் வைத்திருப்பவர்கள், அதை முதலீடு செய்துவிட்டு, தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பணத்தை பெற விரும்பினால், அவர்களுக்கு தங்கமே மிக சிறந்த முதலீடாக இருக்கும். தங்கத்தின் முக்கிய நன்மை அதன் ‘திரவத்தன்மை’ ஆகும். அதாவது, நீங்கள் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்தோ அல்லது சந்தை விலைக்கு உடனடியாக விற்றோ பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த எளிமை மற்றும் அவசர தேவைக்கான உபயோகம் ஆகியவை தங்கத்தை ஒரு தனித்துவமான முதலீடாக மாற்றுகின்றன. இது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும், குறுகிய கால இலக்குகள் கொண்டவர்களுக்கும் ஒரு மிகச் சிறந்த பாதுகாப்பான புகலிடமாக செயல்படுகிறது.
முடிவாக, முதலீட்டாளர்கள் தங்கள் பண இருப்பு மற்றும் அந்தப் பணத்திற்கான தேவை எப்போது வரும் என்பதை மையப்படுத்தியே முதலீட்டைத் தீர்மானம் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் பணமாக மாற்றும் வசதிக்குத் தங்கம் சிறந்தது, நீண்ட காலத்தில் பெரிய வளர்ச்சிக்காக ரியல் எஸ்டேட் சிறந்தது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
Read More : மதிய உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? ஆபத்து வரப்போகுது..!! இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!



