சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் விலையில் $4.04 அதிகரித்து, $96.84-க்கு வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் சர்வதேசப் பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் பக்கம் முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பியதே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்களின் தாக்கம், இந்திய சந்தையிலும் (MCX) எதிரொலிப்பது உறுதி. நேற்று ஓரளவுக்கு குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (ஜனவரி 23) காலை சந்தை தொடங்கியவுடன் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரனுக்குப் பல நூறு ரூபாய் வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தையை உற்று நோக்கி வருகின்றனர்.
Read More : FLASH | அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி..!! இரவோடு இரவாக நடந்த சந்திப்பு..!! குஷியில் இபிஎஸ்..!!



