இந்திய குடிமக்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வளவு அவசியமோ, அதேபோல் சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்களுக்குப் பாஸ்போர்ட் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்யப் பாஸ்போர்ட் கட்டாயமாகும். முன்னொரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சவாலான காரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் இந்த நடைமுறைகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள்ளாகவே பாஸ்போர்ட்டை உங்கள் கைகளில் பெரும் வசதியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பிப்பது எப்படி..?
புதிய பாஸ்போர்ட் பெற விரும்புவோர் முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை தகவல்களை அளித்து புதிய பயனர் கணக்கை (Register) உருவாக்க வேண்டும். பின்னர் உங்களது லாக்-இன் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும், ‘Apply for Fresh Passport’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் கேட்கப்படும் உங்களது தனிப்பட்ட தகவல்களை துல்லியமாக பூர்த்தி செய்வது மிக அவசியமாகும்.
ஆவணங்கள் மற்றும் கட்டண விவரம் :
தகவல்களைப் பூர்த்தி செய்த பிறகு, உங்களது அண்மைக்காலப் புகைப்படம் மற்றும் கையெழுத்தை இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் சேவைக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் (PSK) ஆவண சரிபார்ப்புக்கான தேதியையும் நேரத்தையும் (Appointment) நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கான ஒப்புதல் படிவத்தைப் (Appointment Receipt) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
நேரடி சரிபார்ப்பு மற்றும் காவல்துறை விசாரணை :
குறிப்பிட்ட தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று உங்களது அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அங்கு உங்களது கைரேகை மற்றும் கண் கருவிழிப் படலம் (Biometric) போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களது விண்ணப்பம் அடுத்த கட்டமான காவல்துறை விசாரணைக்கு (Police Verification) மாற்றப்படும்.
காவல்துறை அதிகாரிகள் உங்களது முகவரியை நேரில் வந்து உறுதி செய்த அடுத்த சில நாட்களிலேயே, தபால் மூலம் புதிய பாஸ்போர்ட் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து சேரும். தற்போதைய நவீன முறையில் இந்த ஒட்டுமொத்தப் பணிகளும் ஒரு வாரத்திற்குள் நிறைவடைவது பயணிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.



