விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவு கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.5,000-க்கு பதிலாக வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை, விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்மார்க் சான்றிதழின் அவசியம் என்ன..?
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலாப் பொருட்கள், நெய், தேன், எண்ணெய் மற்றும் மாவு வகைகள் உட்பட 248 அத்தியாவசியப் பொருட்களின் கலப்படத்தை தவிர்க்கும் வகையில், அரசு அக்மார்க் முத்திரையை அங்கீகரித்துள்ளது. மேலும் இது முத்திரை, பொருளின் தரம் மற்றும் கலப்படமற்ற தன்மையை உறுதி செய்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும்போது, அக்மார்க் தரச்சான்றிதழ் பெற்று, முத்திரையை ஒட்டுவது மிக அவசியமாகும்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் அக்மார்க் தரச்சான்று பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களை கிருஷ்ணன்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : Just Now | இனி பனை மரம் வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!