இந்திய பொருளாதாரத்திற்கும், சாமானிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஜனவரியில் இந்திய கச்சா எண்ணெய் கூடையின் சராசரி விலை பீப்பாய்க்கு $59.92 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த மைல்கல்லை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. உலகளவில் விநியோகம் அதிகரித்ததும், அதே சமயம் தேவை குறைந்ததும் இந்த விலைச்சரிவுக்கு முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
எஸ்பிஐ (SBI) ரிசர்ச் உள்ளிட்ட முன்னணி நிதி நிறுவனங்களின் கணிப்புப்படி, இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானது அல்ல. வரும் ஜூன் 2026-க்குள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $50 வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழும்பட்சத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், பீப்பாய்க்கு ஒரு டாலர் குறைந்தால் கூட, நாட்டின் இறக்குமதி செலவில் ஆண்டுக்கு ரூ.13,000 கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) ஆய்வின்படி, 2026-ஆம் ஆண்டில் உலக சந்தையில் ஒரு நாளைக்கு 3.85 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உபரியாக இருக்கும். இந்த விநியோக அதிகரிப்பு விலையைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கும்.
இதற்கிடையே, உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஆசிய நாடுகளுக்கான தனது விற்பனை விலையைத் தொடர்ந்து 3-வது மாதமாக குறைத்துள்ளது. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கூடுதல் லாபத்தை அளிப்பதோடு, உள்நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : உங்கள் ரேஷன் கார்டு Active ஆக இருக்கிறதா..? உடனே செக் பண்ணுங்க..!! இல்லைனா ரூ.3,000 பணம் கிடைக்காது..!!



