சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது.
முன்பு, எல்லாம் ஒரு சொத்தை வாங்கிய பிறகு, அதன் பட்டாவில் பெயரை மாற்றுவது என்பது மிகவும் சிக்கலான மற்றும் நீண்டகாலப் பணியாக இருந்தது. ஆனால், தற்போது பத்திரப்பதிவு துறையையும், வருவாய்த் துறையையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைத்து, “எங்கிருந்தும் எந்த நேரத்திலும்” என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் ‘உடனடி பட்டா பெயர் மாற்றம்’ ஆகும். ஒரு சொத்தை வாங்கும் போது, அதில் நில அளவீடு ரீதியான உட்பிரிவு செய்யத் தேவை இல்லை என்றால், பத்திரப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாங்கியவரின் பெயர் பட்டாவில் தானாக மாறிவிடும். இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை.
நில அளவீட்டில் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
* eservices.tn.gov.in அல்லது tamilnilam.tn.gov.in/citizen/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
* விண்ணப்பதாரரின் பெயர், சொத்தின் மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், பத்திரப்பதிவு எண் போன்ற அனைத்து விவரங்களையும் பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.
* கிரைய பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், ஆதார் அட்டை, பழைய பட்டா போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பட்டா மாற்றத்திற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றத்திற்கு ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றத்திற்கு ரூ.600-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான ஒப்புதல் சீட்டு மற்றும் விண்ணப்ப எண் ஆகியவை உங்கள் மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதன் நிலையை ஆன்லைனிலேயே எளிதாக கண்காணிக்க முடியும். பொதுவாக 15 முதல் 30 நாட்களுக்குள் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பட்டாவை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழக அரசின் இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு, பொதுமக்களுக்கு நேர விரயத்தைக் குறைப்பதுடன், அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் தலையீட்டை முழுமையாக ஒழித்து, ஒரு வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கிறது. இனி எந்த அலைச்சலும் இன்றி, மக்கள் தங்கள் சொத்துக்கான உரிமையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் நிலைநாட்ட முடியும்.
Read More : கொழுந்தனாரின் ஆணுறுப்பை அறுத்து தூக்கி வீசிய அண்ணி..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் காரணம்..!!



