தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கி, அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இனி, பெயர் மாற்றத்திற்காக நுகர்வோரிடம் இருந்து தேவையற்ற ஆவணங்களை கேட்டு, கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழைய நடைமுறையின்படி, மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் ‘படிவம் 2’ கட்டாயமாக இருந்தது. இதனால், பல நுகர்வோர் சிரமங்களை எதிர்கொண்டனர். தற்போது, அந்த ‘படிவம் 2’-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வாரிசுதாரர்கள், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இறந்திருந்தால், பெயர் மாற்றத்திற்கு வாரிசு சான்றிதழ் அல்லது அண்மையில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரம் ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் போதுமானது.
விற்பனை மற்றும் பரிசளித்தலுக்கு விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், விற்பனைப் பத்திரம், சொத்து வரி ரசீது அல்லது நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒரு ஒப்புதல் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள், பெயர் மாற்றப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தேவையற்ற அலைச்சலையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



