RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சலுகை 2026 ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை, ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக, தேவையான மென்பொருள் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS)-க்கு, டிசம்பர் 30 அன்று ரயில்வே அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.
எந்த கட்டண முறைகளுக்கு தள்ளுபடி? இந்த 3% தள்ளுபடி, R-Wallet பயனர்களுக்கு மட்டுமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. RailOne செயலியில் UPI, கிரெடிட் / டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகளிலும் இந்த தள்ளுபடி கிடைக்கும். தற்போது RailOne செயலியில் R-Wallet மூலம் கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு 3% கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடரும் என்றும், அதோடு புதிய 3% நேரடி தள்ளுபடியும் சேரும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, R-Wallet பயன்படுத்தி RailOne செயலி மூலம் பொது டிக்கெட் முன்பதிவு செய்தால் மொத்தம் 6% வரை சேமிப்பு கிடைக்கும். இந்த தள்ளுபடி RailOne செயலியில் மட்டும் வழங்கப்படும் என்றும், வேறு எந்த ஆன்லைன் தளம், இணையதளம் அல்லது செயலிகள் மூலம் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் இந்த சலுகை கிடைக்காது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகளை அதிகாரப்பூர்வ RailOne செயலியைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
RailOne செயலி என்றால் என்ன? RailOne என்பது ‘ஒரே இடத்தில் அனைத்து ரயில் சேவைகள்’ வழங்கும் ஒருங்கிணைந்த செயலி. இந்த செயலியை Android மற்றும் iOS தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். mPIN அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் ஒருமுறை உள்நுழைந்தால், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
Read more: இந்த நாடுகளில் ஜனவரி 1-ல் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.. அது ஏன் திமிங்கலம்..?



