தொலைத்தொடர்புத் துறையில் சிம் கார்டு எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் ‘போர்ட்டபிலிட்டி’ வசதி இருப்பது போல, இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நுகர்வோர் தங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இந்த வசதி வழிவகுக்கும்.
கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில், ஒரே நிறுவனத்திற்குள் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அதை விரிவுபடுத்தி, கேஸ் இணைப்பு எண்ணை மாற்றாமல், பாரத் கேஸ் வாடிக்கையாளர் இண்டேன் அல்லது ஹெச்.பி. கேஸ் போன்ற வேறு நிறுவனத்திற்கு மாறலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கேஸ் சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்யவே இந்த ‘எல்பிஜி போர்ட்டபிலிட்டி’ வசதி அவசியம் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (PNGRB) தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நாட்டில் கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 32 கோடியை தாண்டிய நிலையில், விநியோக தாமதம் உள்ளிட்ட புகார்களின் எண்ணிக்கையும் 18 லட்சத்தை கடந்தது. இந்தப் புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான விநியோகஸ்தரை தேர்வு செய்ய இந்த வசதி உதவும். இதனால், விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.
இந்த திட்டம் குறித்த கருத்துகளை நுகர்வோர்களும், விநியோகஸ்தர்களும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று PNGRB அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மண் பானைகளில் சமைப்பதால் உடலில் நடக்கும் மேஜிக்..!! ஆனால் இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!!