தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன..
இந்த நிலையில் SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் கோவையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டுவதற்காக அரசுப் பேருந்துகளில் திமுகவினர் ஆட்களை ஏற்றி செல்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் தீவிர சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டுவதற்காக, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூர் பணிமனையில் இருந்தும் அரசுப் பேருந்துகளில், திமுகவினர் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்தும், குறைந்தது 10 அரசுப் பேருந்துகள், திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. திமுகவினரின் இந்த அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், போதுமான பேருந்துகள் இன்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திமுகவினர், பொய்யான கூட்டம் காட்டி, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களை ஏமாற்ற, சாதாரண பொதுமக்களைத் துன்புறுத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
Read More : 2026 சட்டமன்ற தேர்தல்.. பொதுச் சின்னம் கோரி தவெக மனு.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!



