பழைய மோட்டார் வாகனங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (RC) புதுப்பிப்பு கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* இலகுரக மோட்டார் வாகனங்கள் (LMV): இதற்கு முன் ரூ.5,000 இருந்த புதுப்பிப்பு கட்டணம் இனி ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* மோட்டார் சைக்கிள்கள்: ரூ.1,000 இருந்த கட்டணம் ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் குவாட்ரிசைக்கிள்கள்: ரூ.3,500 இருந்த கட்டணம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* இறக்குமதி செய்யப்பட்ட 2 மற்றும் 3 சக்கர வாகனங்கள்: புதுப்பிப்பு கட்டணம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இறக்குமதி செய்யப்பட்ட நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கர வாகனங்கள் புதுப்பிப்பு கட்டணம் ரூ.80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் தொடர்பான வரைவு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 21, 2025 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், அக்டோபர் 2021-ல் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களில் ஒருமுறை உயர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் டெல்லி–என்சிஆர் பகுதியில் 10 ஆண்டுகள் கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் கடந்த பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது. வாகனங்களின் உற்பத்தி ஆண்டு மட்டுமின்றி, அவற்றின் உண்மையான பயன்பாடு மற்றும் பராமரிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலின் பேரில்தான் இந்த உத்தரவு வந்துள்ளது.