சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
பி.காம். முடித்த அந்த இளம்பெண், ‘மோஜ்’ (Moj) என்ற சமூக வலைதளச் செயலி மூலம் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, லிபின் ராஜ் (25) என்ற வாலிபர் அந்த செயலி வாயிலாக இவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய லிபின் ராஜ், நாளடைவில் காதலிப்பதாக கூறி அப்பெண்ணுக்கு வலை விரித்துள்ளார்.
பின்னர், காதலில் மயங்கிய அந்தப் பெண் அவரோடு வீடியோ காலிலும் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை லிபின் ராஜ் ரகசியமாக எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்ட லிபின் ராஜ், “உன்னை ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வது போலக் கேட்காவிட்டால், அந்தப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்துபோன இளம்பெண், அவர் சொல்வதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட லிபின் ராஜ், “பெரியமேட்டில் உள்ள லாட்ஜுக்கு வந்துவிடு, நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம்” என்று வற்புறுத்தியுள்ளார். முதலில் தயங்கிய அந்தப் பெண்ணை, புகைப்படங்களை வெளியிடுவதாக மீண்டும் மிரட்டி, லாட்ஜுக்கு வரவழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்னரும், மீண்டும் ஒருமுறை லாட்ஜுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். 3-வது முறையாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, லிபின் ராஜ் மீண்டும் அந்தப் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்து, “இந்த முறையும் நீ வராவிட்டால் நடப்பதே வேறு. உனது உறவினர்களுக்கே ஆபாசப் படங்களை அனுப்பி விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
ஆனால், அப்பெண் தனது பாட்டி இறந்து மூன்று நாட்களே ஆவதால் வர முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ், அந்த இளம்பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை அவரது தாயாரின் செல்போனுக்கே அனுப்பி வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், உடனடியாக இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் லிபின் ராஜ் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், கன்னியாகுமரியை சொந்த ஊராக கொண்ட ஆட்டோ ஓட்டுநரான லிபின் ராஜை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று வேறு ஏதேனும் பெண்களை அவர் மிரட்டி உள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.



