தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ‘வட்டார ஒருங்கிணைப்பாளர்’ (Block Coordinator) பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (UG Degree) பெற்றிருக்க வேண்டும். இதனுடன், MS Office கணினி பிரிவில் குறைந்தபட்சம் 3 மாத சான்றிதழ் படிப்பு அல்லது கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், விண்ணப்பிக்கும் நபர் சம்பந்தப்பட்ட ஒன்றியத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த நியமனம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது என்பதால், எதிர்காலத்தில் பணியினை முறைப்படுத்தவோ அல்லது கூடுதல் சலுகைகளையோ கோர இயலாது. அதேபோல், ஏற்கனவே அரசு திட்டங்களான புது வாழ்வு திட்டம் அல்லது இதர அரசு நிறுவனங்களில் பணியாற்றி நிதி முறைகேடு அல்லது நன்னடத்தை காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இந்தப் பணிக்குத் தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, இன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (DRDA Building) முகவரிக்குப் பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். இன்று மாலை 5 மணிக்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கோடைக்கால சிறப்பு உதவித்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!!


