திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
திமுகவில் இருக்கும் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் தளிக்கோட்டை ராஜு தேவர் பாலு என்கிற டி.ஆர். பாலு. கருணாநிதிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமானவர். ஸ்டாலினுக்கு நண்பர் என்பதால் அவரிடம் எந்தவொரு விஷயத்தையும் நேரடியாக பேசக்கூடியவர். 16 வயதிலே திமுகவில் இணைந்த டிஆர் பாலு 2009, 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி வாகை சூடினார்.
இவரது நீண்டகால நாடாளுமன்ற அனுபவங்களை கருத்தில்கொண்டு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார். இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கருணாநிதி உள்ளிட்டோருடன் அன்பாக இருந்த ரேணுகா தேவி திமுகவின் முக்கிய முகமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.