தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது..
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வி. சேகர், 1980–90களில் குடும்பக் கதைகளுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இயக்குனராக மட்டுமல்லாது, திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் அவர் முக்கியமான இடத்தை பிடித்தார். அவரின் படங்களில் குடும்ப உறவுகள், மனித மதிப்புகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்..
ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, நான் பெத்த மகனே, காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல வெற்றிப் படங்களை அவர் இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.
சினிமா துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய வி. சேகர், பல புதிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்து முக்கிய பங்காற்றினார். இந்த சூழலில் வி.சேகரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..



