பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சரண் மாவட்டத்தின் மனாஸ் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர், சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், விபத்துக்குள்ளான வீடு 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது என்றும், அதன் நிலை மிகவும் மோசமடைந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பாட்னா வருவாய் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்குவதற்காக, சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீஸார் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த இந்த துயர நிகழ்வு மனாஸ் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : நிலைமை ரொம்ப மாறிப்போச்சு..!! மருத்துவத் துறைக்கே சவால்..!! மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!!



