கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முஹம்மது உள்பட அதில் பயணம் செய்த 8 பேரும் உடல்சிதறி பலியாகினர். நாட்டில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை ஒடுக்குவதற்காக ஒபுவாசி நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதாக கூறப்படுகிறது.