பிரபல அசாமிய பாடகரும் கலாச்சார ஐகானும் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நடந்த ஒரு ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார்.. இந்த தகவலையறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர் அவரை கடலில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
செப்டம்பர் 20 ஆம் தேதி அவர் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த வடகிழக்கு விழாவில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றார். அவரது திடீர் மரணம் ரசிகர்களையும் அசாம் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இது இந்தியாவின் இசைத் துறையில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ரிபு போரா, தனது எக்ஸ் பக்கத்தில் பாடகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பதிவில், “நமது கலாச்சார சின்னமான ஜூபீன் கார்க்கின் அகால மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரது குரல், இசை மற்றும் அடக்க முடியாத மனப்பான்மை அசாம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்
நடிகர் அடில் ஹுசைன் பாடகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்க பதிவில் “சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் ஜுபீன் கார்க் திடீரென இறந்த செய்தியால் மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்… அசாமிய இசை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு அசாதாரணமானது… அவர் தனது பாடல்கள் மூலம் நம்மிடையே வாழ்வார்… அன்புள்ள ஜுபீன். நான் உங்களை மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் நினைவுகூருகிறேன்.. அவரது பாடும் ஆன்மா சாந்தியடையட்டும், கடவுள் அவரது ஆன்மாவை ஆசீர்வதிப்பாராக… விடைபெறுகிறேன். ஜுபீன்.. மறுபுறம் நாம் சந்திக்கும் வரை… உங்கள் அழகான குரலுடன் பாடிக்கொண்டே இருங்கள், கடவுள்களை மகிழ்விக்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் அசாமின் குரல் என்று குறிப்பிடப்படும் ஜுபீன், ‘கேங்ஸ்டர்’ படத்தில் இருந்து ‘யா அலி’ என்ற தனது ஆத்மார்த்தமான பாடலுடன் தேசிய அளவில் புகழ் பெற்றார். இது இந்தியா முழுவதும் ஒரு தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தது. ‘தில் து ஹி படா’ (கிரிஷ் 3) மற்றும் ‘ஜானே கியா சாஹே மான்’ (பியார் கே சைட் எஃபெக்ட்ஸ்) போன்ற பிற பாலிவுட் வெற்றி பாடல்களையும் அவர் பாடி உள்ளார்.. ஹிந்தி, அசாமி, பெங்காலி, நேபாளி மற்றும் பல பிராந்திய மொழிகளில் பாடல்களை பாடி, ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.