மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டான்வா டேத்வெல்சன் லாபாங் (Donwa Dethwelson Lapang), தனது 91 வயதில் காலமானார்.
ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபாங், ஒரு சாலைத் தொழிலாளியாகவும், பள்ளி துணை ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி, 1992 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார்.
1972-ஆம் ஆண்டு, நொங்போ தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார். பல ஆண்டுகளாக மேகாலயாவின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக திகழ்ந்த லாபாங், பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.
அரசியலில் இருந்து விலகிய பின்னரும், ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவராகவே இருந்து வந்தார். மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், 2024இல் ரி-போய் மாவட்டத்தில் அவருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாபாங், வெள்ளிக்கிழமை இரவு ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



