தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தனது மிக முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 13, 2026) மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி பெண் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாக தலா ₹5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த ஒட்டுமொத்தத் தொகையான ₹5,000 என்பது பல பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை தலா ₹1,000 வீதம் மொத்தம் ₹3,000 முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கோடைக்கால சிறப்பு நிதியுதவியாகக் கூடுதலாக ₹2,000 சேர்த்து விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகளால், பயனாளிகளுக்குத் தடையின்றி நிதி சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், சமூக வலைதளங்களில் மேலும் ₹5,000 கூடுதலாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் செய்திகள் குறித்து அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள “திராவிட மாடல் 2.0” தேர்தல் வாக்குறுதியில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாகப் பேசப்படும் நிதிப்பலன்கள், பெண்களின் சுயதொழில் அல்லது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கடனுதவியாக இருக்கலாம் என தகவல்கள் கசிந்தாலும், அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தன்மை புலப்படும்.



